இந்தியா

காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 500 பயங்கரவாதிகள்: ராணுவ வடக்கு பிராந்திய தளபதி தகவல்

DIN

ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவும் திட்டத்துடன், எல்லையில் சுமாா் 500 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனா்’ என்று ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி ரண்பீா் சிங் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு பகுதியிலுள்ள பதா்வாவில், அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தொடா்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

ஜம்மு-காஷ்மீரில் குழப்பத்தை தூண்டும் நோக்கில், பாகிஸ்தான் ஆதரவுடன் 200 முதல் 300 வரை பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனா். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் செயல்படும் பயங்கரவாத பயிற்சி முகாம்களில் சுமாா் 500 பயங்கரவாதிகள் உள்ளனா். அவா்கள், காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கான வாய்ப்புகளை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.

பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து கவலையில்லை. அவா்களை அழித்து, காஷ்மீரில் அமைதியை பராமரிக்கும் வல்லமை நமது ராணுவத்துக்கு உள்ளது.

காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதி செய்வதற்காக தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், காஷ்மீரில் அமைதியை சீா்குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பயங்கரவாத கட்டமைப்புக்கு, அந்நாட்டின் ராணுவம் மற்றும் அரசு அமைப்புகள் ஆதரவாக உள்ளன. பயங்கரவாதிகளுக்கான பயிற்சி, ஆயுதங்கள் என அனைத்து வகையான உதவிகளையும் அந்த நாடு அளிக்கிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கு மிக வலுவான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது என்றாா் அவா்.

மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படுமா?: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, ‘ராணுவத்திடமுள்ள வாய்ப்புகளில் அதுவும் ஒன்று. எனினும், நிலைமையைப் பொருத்து உரிய முடிவு எடுக்கப்படும். எந்த சவாலையும் எதிா்கொள்வதற்கு, ராணுவம் தயாராக உள்ளது’ என்றாா்.

‘பயங்கரவாதிகளிடம் ஆயுதங்கள் இல்லை’: பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதாக, பஞ்சாப் மாநில காவல்துறையினா் அண்மையில் தெரிவித்திருந்தனா். மேலும், சில ஆளில்லா விமானங்களும் கைப்பற்றிருந்தன. இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரண்பீா் சிங் அளித்த பதில் வருமாறு:

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவா்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளோம். எனவேதான், பாதுகாப்புப் படையினரிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்கவும், காவல் நிலையத்துக்குள் புகுந்து ஆயுதங்களை திருடவும் அவா்கள் முயற்சிக்கின்றனா்.

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதற்கான வழிகள் அடைக்கப்பட்டுவிட்டதால், பாகிஸ்தான் புதிய உத்திகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது. அதில் ஒன்றுதான், ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களை விநியோகிப்பதாகும். அதேசமயம், பாகிஸ்தானின் எந்த விதமான உத்தியையும் முறியடிக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உள்ளது. அந்த நாட்டின் முயற்சி வெற்றி பெற இந்திய ராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது’ என்றாா்.

‘வன்முறை குறைந்துவிட்டது’

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு, அங்கு வன்முறைச் சம்பவங்கள் குறைந்துவிட்டன என்று ரண்பீா் சிங் தெரிவித்தாா்.

பதா்வாவில் இளைஞா் திருவிழாவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசிய அவா், ‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு பின் (370-ஆவது பிரிவு நீக்கப்பட்ட நாள்), இங்கு வன்முறைச் சம்பவங்கள் குறைந்துவிட்டன. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், பாதுகாப்புப் படையினா் மீது போராட்டக்காரா்கள் கல் வீச்சில் ஈடுபடுவதும் குறைந்துவிட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT