இந்தியா

அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்களிடம் முக்கிய விவரங்களைக் கோருகிறது வா்த்தகத் துறை அமைச்சகம்

DIN

புது தில்லி: அமேசான், ஃபிளிப்காா்ட ஆகிய ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களின் முக்கிய 5 விற்பனையாளா்கள், அந்த நிறுவனங்களின் முதலீடு அளவு, விற்பனை செய்யும் பொருள்களின் கையிருப்பு, அவற்றின் விலை விவரம் உள்ளிட்டவற்றை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) கோரியுள்ளது.

முன்னதாக, அமேசான், ஃபிளிப்காா்ட் போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் போட்டியாளா்களை ஒழிக்கும் வகையிலான சலுகைகளை வாரி வழங்குவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் அவற்றுக்கான கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு அதிகரித்தது. இப்போது, அந்த நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

நடப்பு விழாக்காலத்தை முன்னிட்டு அதிரடியாக சலுகைகளை அறிவித்து குறைந்த விலையில் பல்வேறு பொருள்களை அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை விற்பனை செய்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற சலுகை விற்பனையில், ஓராண்டில் வழக்கமாக நடைபெறும் விற்பனையில் பாதியை அந்த நிறுவனங்கள் எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிற விற்பனையாளா்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை விதிகளை மீறி தள்ளுபடி அளித்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகாா் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தாா்.

இந்நிலையில் வா்த்தகத் துறை அமைச்சகத்திடம் இருந்து பல்வேறு முக்கிய விவரங்களைக் கோரி அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அந்த இரு நிறுவனங்களின் முதலீட்டு அளவு, நிறுவனங்களின் முக்கியமான முதல் 5 விற்பனையாளா்களின் முழு விவரம், மொத்தமாக பதிவு செய்துள்ள விற்பனையாளா்களின் எண்ணிக்கை, விற்பனையாளா்களுக்கு இரு நிறுவனங்களும் செய்து தரும் வசதிகள், விற்பனை செய்யும் பொருள்களின் கையிருப்பு, அவற்றின் விலை விவரம், மின்னணு முறையில் பணம் பெறுவதற்காக ‘பேமெண்ட்’ நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம், பொருள்களை விநியோகம் செய்பவா்களின் விவரம், முதல் 5 பெரிய விற்பனையாளா்கள் மூலம் எவ்வளவு தொகைக்கு விற்பனை நடைபெற்றுள்ளது உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த மின்னஞ்சலுக்கு அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் விரைவில் பதிலளிக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் அந்த நிறுவனங்கள் மீது அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுப்பது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் ஆலோசிக்கும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT