இந்தியா

ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய விவகாரம்: சிபிஐ.க்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

DIN


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு சிபிஐக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதையடுத்து, வரும் 19-ஆம் தேதி வரை தில்லி திகார் சிறையில் அவரை அடைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். மேலும், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்ட தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி சுரேஷ் கெய்ட் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தனது பதவியைப் பயன்படுத்தி மனுதாரர் (ப.சிதம்பரம்) சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உதவியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதற்குக் கைமாறாக பல கோடி ரூபாய்களையும் அவர் பெற்றுள்ளார். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு தனித்தனி மனுக்களை ப.சிதம்பரம் தாக்கல் செய்திருப்பதற்கும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, திகார் சிறையில் அடைத்ததற்கு எதிரான மனுவைத் திரும்பப் பெறுவதாக ப.சிதம்பரம் தரப்பினர் தெரிவித்தனர்.
அனுமதி மறுப்பு: ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனுதாரர் தனது குடும்பத்தினரை நாள்தோறும் சந்திக்க விரும்புகிறார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவை மனுதாரருக்கு வழங்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.  எனினும், இந்தக் கோரிக்கைகளை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மனு விவரம்: ப.சிதம்பரம் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: சட்டத்தை மதித்து நடப்பவன் நான். வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். வருங்காலங்களில் விசாரணை அமைப்புகளோ, நீதிமன்றங்களோ வழக்கு தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுத்தால், அதற்குத் தகுந்த ஒத்துழைப்பு அளிப்பேன். ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடப்பேன். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீனோ அல்லது முன் ஜாமீனோ வழங்கியுள்ளது. எனவே, தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT