இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

DIN


புதிய நாடாளுமன்ற கட்டடம், பல்வேறு மத்திய அமைச்சகங்களின் அலுவலகங்கள் ஒருங்கே அமைந்த வளாகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய குடியிருப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார். 
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இதனை தெரிவித்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் மோடி அரசின் கனவுத் திட்டம் தொடர்பாக அமைச்சர் ஒருவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். 
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முதல், இந்தியா கேட் பகுதி வரையிலான சுமார் 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியில் நாடாளுமன்றக் கட்டடம், மத்திய அரசு அமைச்சகங்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ளன. 
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது:  புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்படும் இடம், அதன் வடிவமைப்பு தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அக்டோபர் மாதத்தின் இடையே கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளும் அடுத்த ஆண்டு தொடங்கும்.  மத்திய அமைச்சகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் பிளாக், செளத் பிளாக் பகுதிகளும், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் பகுதி வரையிலான 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியில் இருக்கும் இதர அரசு கட்டடங்களும் புதிதாக அமைக்கப்படும். 
அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-ஆம் ஆண்டு நடைபெறும்போது புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது  என்று அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.  
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறுகையில், 2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான பகுதியில் அரசு கட்டடப் பணிகள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும். பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் ஒருங்கே அமைந்த வளாகமும் 2024-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். 
இதற்காக சாஸ்திரி பவன், உத்யோக் பவன், கிருஷி பவன் உள்ளிட்ட கட்டடங்கள் தகர்க்கப்பட்டு, அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் கட்டப்படும் என்று தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT