ராஜஸ்தானில் ஊரடங்கை அமல்படுத்திய காவலர்கள் மீது தாக்குதல்
ராஜஸ்தானில் ஊரடங்கை அமல்படுத்திய மூன்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோன்க்: ராஜஸ்தானில் ஊரடங்கை அமல்படுத்திய மூன்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 13,495 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 448 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில் ராஜஸ்தானில் ஊரடங்கை அமல்படுத்திய மூன்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் விபின் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டோன்க் காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் ராம்ராஜ், ராஜேந்தர் மற்றும் பாக்சந்த் ஆகிய மூவரும் வழக்கமான ரோந்துப்பணிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் கசாப்புக் கடை சந்தைக்குப் பகுதிக்குச் சென்ற போது அங்கிருந்த உள்ளூர் மக்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த அவர்கள் மூவரும் சிகிசைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு இருந்த சிலரை சந்தேகத்தின் பேரால் அழைத்து வந்து விசாரித்து வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.