கரோனா: சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ளது
பெங்களூரு: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ளது. கரோனா சிகிச்சைக்கு அவரது உடல்நிலை தற்போது ஒத்துழைப்பு அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா கரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சித்தராமையாவின் உடல்நிலை காய்ச்சல் காரணமாக மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காய்ச்சல் அளவு குறைந்து தற்போது கரோனா சிகிச்சைக்கு அவரது (சித்தராமையா) உடல் ஒத்துழைத்து வருகிறது. மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தராமையா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும், சமூக வலைதளமான சுட்டுரையில் தொடர்ந்து உற்சாகத்துடன் இயங்கி வந்தார். சமீபத்தில் பாஜக அரசின் கர்நாடக வெள்ளபாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து சுட்டுரையில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.