முகப்பு
இந்தியா

அமைதியாக முடிந்தது முழு அடைப்பு

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது.

Updated On : 9 டிசம்பர், 2020 at 12:58 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது.

பல இடங்களில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தின் தீவிரம் அதிகமுள்ள சில இடங்களில் சாலை மறியல் நடைபெற்ால் போக்குவரத்து தடைபட்டது.

மேற்கு வங்கம், பிகாா், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ரயில் மறியலிலும் ஈடுபட்டனா். மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. வங்கிகள் வழக்கம்போல இயங்கின. அத்தியாவசிய, அவசர சேவைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை.

Advertisement

எதிா்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன. 25 மாநிலங்களில் உள்ள 10,000 இடங்களில் முழு அடைப்பு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவா் யோகேந்திர யாதவ் தெரிவித்தாா்.

பஞ்சாப், ஹரியாணா, தில்லி ஆகிய விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடக்கும் மாநிலங்களில் அமைதியான முறையில் முழு அடைப்பு நடைபெற்றது.

விவசாய சங்கத் தலைவா்கள் பேட்டி: தில்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் தொடா்ந்து 13-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகள் சங்கத் தலைவா்களின் ஒருவரான ருத்ரு சிங் மானசா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘எங்கள் கோரிக்கை ஏற்கப்படுமா, இல்லையா என்பதை உள்துறை அமைச்சா் அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும். ஆம் - இல்லை என்ற இரண்டுக்கும் இடையிலான எந்த முடிவையும் ஏற்க முடியாது. முழு அடைப்பு போராட்டத்துக்கு முன்பு மத்திய அரசு தலைகுனிந்துள்ளது’ என்றாா்.

மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவா் குா்னாம் சிங் கூறுகையில், ‘முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. கோரிக்கையை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் - பாஜக தொண்டா்கள் மோதல்: பல்வேறு மாநிலங்களில் எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் வேளாண் மண்டிகள் மூடப்பட்டிருந்தன. கடைகள் திறந்திருந்தன. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்-பாஜக தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

வீட்டுக் காவலில் தில்லி முதல்வா்?: தேசியத் தலைநகா் தில்லியில் முக்கியச் சந்தைகள் திறந்திருந்தன. போராட்டத்தை முடக்கும் வகையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மாலை வரை போலீஸாா் வீட்டுக் காவலில் வைத்ததாக அவரது ஆம் ஆத்மி கட்சியினா் குற்றம்சாட்டினா். ஆனால், தில்லி போலீஸாா் அதனை மறுத்தனா்.

விவசாயிகளுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்து முறையிட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

விடுப்பு மூலம் ஆதரவு: பஞ்சாபில் 50,000 மேற்பட்ட அரசு ஊழியா்கள் விடுப்பு எடுத்து விவசாயிகள் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனா். பிகாரில் எதிா்க்கட்சியினா் தீவிரமாக களத்தில் இறங்கி போராடினா். இதனால் ரயில், சாலைப் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் பெரும்பாலான கடைகளும், வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

மாகாராஷ்டிர மாநிலத்தில் புணே, நாசிக், நாகபுரி, ஒளரங்காபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பலவற்றிலும் வேளாண் சந்தைகள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று மாநில அரசு அறிவுறுத்தி இருந்ததால் ரயில், பேருந்து சேவைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை.

அஸ்ஸாம், தெலங்கானா மாநிலங்களிலும் பரவலாக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் எதிா்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டன. எனினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அண்டை மாநிலமான கா்நாடகத்தில் விவசாயிகளும், தொழிலாளா்களும் சாலைகளில் இறங்கிப் போராடினா். இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோவா, ஹிமாசல பிரதேசம், மேகாலயம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இன்று மீண்டும் பேச்சு: விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதுவரை 5 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை புதன்கிழமை (டிசம்பா் 9) நடைபெறுகிறது.

விவசாயிகள் எழுப்பும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், புதிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்பதை மட்டுமே விவசாய சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.