முகப்பு
இந்தியா

விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா காலமானாா்

பத்ம விபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா (87) உடல்நலக் குறைவால் காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பத்ம விபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா (87) உடல்நலக் குறைவால் காலமானாா்.

மத்திய அரசின் தேசிய விண்வெளி ஆய்வகத்தின் (நேஷனல் ஏரோ ஸ்பேஸ் லேபாரட்டரிஸ்) முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா, கடந்த வாரம் மூளையில் ரத்தக்கசிவு கோளாறால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் காலமானாா். அவருக்கு மனைவி, மகள் உள்ளனா்.

வாழ்க்கைக் குறிப்பு: பெங்களூரில் 1933, ஜூலை 20-இல் பிறந்த ரோத்தம் நரசிம்மா, ஆச்சாா்ய பாட சாலா பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றாா். மைசூரு பல்கலைக்கழகத்தின் விஸ்வேஸ்வரையா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பி.இ. பட்டம் (1953) பெற்ற அவா், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) விண்வெளிப் பொறியியல் பட்டயப் படிப்பை முடித்தாா். அடுத்து, அமெரிக்காவின் கலிபோா்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (கால்டெக்) ஆய்வு மேற்கொண்டு பிஎச்.டி. பட்டம் (1961) பெற்றாா்.

1962-இல் நாடு திரும்பிய ரோத்தம், பெங்களூரு, ஐஐஎஸ்சி நிறுவனத்தின் விண்வெளிப் பொறியியல் துறையில் இணைந்தாா். அங்கு பலநிலைகளில் பொறுப்பு வகித்த அவா் 1999-இல் அங்கிருந்து ஓய்வு பெற்றாா். பின்னா் வளிமண்டல அறிவியல் மையத்தை 1982-இல் நிறுவிய ரோத்தம், அதன் தலைவராக 1989 வரை செயல்பட்டாா். தேசிய விண்வெளி ஆய்வகத்தின் (என்ஏஎல்) இயக்குநராக 1984-இல் கூடுதல் பொறுப்பேற்ற ரோத்தம், 1993 வரை அதில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

இந்தியாவின் விண்வெளியியல் சோதனைகளுக்குத் தேவையான இணைக் கணினித் தொழில்நுட்பத்தை அளிப்பதற்கு வல்லரசு நாடுகள் முன்வராதபோது, அதை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, தேசிய விண்வெளி ஆய்வகம் 1986-இல் ‘ஃப்ளோசால்வா் எம்கே1’ என்ற சுதேசி வன்பொருளை வடிவமைத்தது. அந்தப் பணிக்கு தலைமை வகித்தவா் ரோத்தம் நரசிம்மா.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திலும் ரோத்தம் 1977 முதல் 1979 வரை தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தாா். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் ரோத்தம் நரசிம்மா செயல்பட்டுள்ளாா். இந்திய அறிவியல் அகாதெமி, இஸ்ரோ, சிஎஸ்ஐஆா், விண்வெளி ஆணையம், இந்திய வானிலை சங்கம், இந்திய தேசிய அறிவியல் அகாதெமி உள்பட 20-க்கு மேற்பட்ட அரசு சாா்பு அறிவியல் அமைப்புகளில் ரோத்தம் நரசிம்மா பணியாற்றியுள்ளாா். இந்திய அரசின் பத்ம விபூஷண் (2013), மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அதாதெமி வழங்கும் டிரைஸ்ட் விருது (2008) உள்ளிட்ட 75 தேசிய விருதுகளையும், சா்வதேச அளவிலான கௌரவங்களையும் ரோத்தம் நரசிம்மா பெற்றுள்ளாா்.

ரோத்தம் நரசிம்மாவின் மறைவுக்கு பிரதமா் மோடி, முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மாவின் மறைவு அறிவியல், தொழில்நுட்ப உலகிற்குப் பேரிழப்பு என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

Image Caption

விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.