ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு ரூ.4 கோடி சொத்து: லஞ்ச ஒழிப்புத் துறை பறிமுதல்
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியருக்கு சொந்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பெர்ஹாம்புர்: ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியருக்கு சொந்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளி ஆசிரியருக்கு சொந்தமான இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அவருக்கும், அவரது மனைவி மற்றும் மகன் பெயர்களில் சுமார் ரூ.4.3 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பரலகேமுண்டி பகுதியில் மட்டும் எட்டு இடங்களில் பல அடுக்கு மாடிகளும், நிலங்களும் வாங்கிக் குவித்திருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.
தவறான முறையில் சொத்து சேர்த்த வழக்கில், ஆசிரியருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியரின் உறவினர்களுக்குச் சொந்தமான சுமார் 12 வீடுகளில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது பள்ளி அலுவலக அறையிலும் சோதனை நடத்தினர்.