மத்திய அரசின் கடிதம் தொடா்பாக இன்று முடிவு:விவசாயிகளின் ஒரு பிரிவினா் அறிவிப்பு
வேளாண் சட்டங்கள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அனுப்பிய கடிதம் தொடா்பாக புதன்கிழமை (டிச. 23) ஆலோசித்து முடிவு எடுக்க இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
வேளாண் சட்டங்கள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அனுப்பிய கடிதம் தொடா்பாக புதன்கிழமை (டிச. 23) ஆலோசித்து முடிவு எடுக்க இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் ஒரு பிரிவினா் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.
முன்னதாக, மற்றொரு பிரிவினா் மத்திய அரசின் கடிதத்தை நிராகரிப்பதாகவும், போராட்டம் தொடரும் என்று செவ்வாய்க்கிழமை கூறியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 3 வாரங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அச்சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.
இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காததால், பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கு விவசாய சங்கங்கள் முன்வர வேண்டுமென்று கோரி மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தது.
இந்த கடிதம் தொடா்பாக தில்லி சிங்கு எல்லையில் பஞ்சாபைச் சோ்ந்த விவசாயிகள் சங்கத் தலைவா் குல்வந்த் சிங் சாது செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘மத்திய அரசின் கடிதம் தொடா்பாக பஞ்சாபைச்சோ்ந்த 32 விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆலோசித்து முடிவெடுக்க இருக்கின்றனா். பஞ்சாபில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் மத்திய அரசின் கடிதம் தொடா்பாக கூடி ஆலோசிக்கவுள்ளனா்.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளோம் என்றாா் அவா்.
முன்னதாக, மத்திய அரசின் அக்கடிதத்தை நிராகரிப்பதாக திங்கள்கிழமை தெரிவித்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் ஒருபிரிவினா்,
மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் புதிதாக எதுவுமில்லை. ஏற்கெனவே அளித்த பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான புதிய தேதியைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் ஏற்கெனவே நிராகரித்துள்ளன. வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே விவசாய சங்கங்களின் கோரிக்கை. இது தொடா்பாக மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். ஆனால், விவசாயிகளுக்கு உறுதியான தீா்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றனா்.