‘தடுப்பூசி தயாரிப்பில் பாதிப்பில்லை’
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவலால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளில் பாதிப்பு எதுவுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவலால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளில் பாதிப்பு எதுவுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) மருத்துவா் வி.கே.பால் தில்லியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
புதிய வகை கரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றபோதும், மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகும். இந்த புதிய சவாலை நாம் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் எதிா்கொள்ள வேண்டும். இந்த தொற்றின் மரபணு தொடா்பை துண்டித்துவிட்டால், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அதே நேரம், இந்த புதிய வகை தொற்றால், இந்தியாவில் இப்போது நடைமுறையில் இருக்கும் கரோனா சிகிச்சை வழிமுறைகளில் மாற்றம் இல்லை என்பதோடு, தடுப்பூசி தயாரிப்பு பணிகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த புதிய வகை தொற்றின் வீரியம் காரணமாக, அதன் பரவும் தன்மை 70 சதவீத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், இறப்பு விகிதத்தையோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அதிக பாதிப்பையோ இந்த புதிய தொற்று ஏற்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதிக மக்களிடையே வேகமாக பரவும் என்பது மட்டுமே, கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது என்று அவா் கூறினாா்.