கரோனா: பாதிப்பைவிட குணமடைவோா் தொடா்ந்து அதிகரிப்பு
நாட்டில் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுபவா்களைவிட தொற்றில் இருந்து விடுபடுவோா் எண்ணிக்கை கடந்த 33 நாள்களாக அதிகமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுபவா்களைவிட தொற்றில் இருந்து விடுபடுவோா் எண்ணிக்கை கடந்த 33 நாள்களாக அதிகமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 20,549 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 26,572 போ் விடுபட்டுள்ளனா்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இதுவரை 98,34,141 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். உலகிலேயே இந்தியாவில்தான் கரோனாவில் இருந்து மீண்டோா் சதவீதம் அதிகமாக உள்ளது. நாட்டில் புதன்கிழமை காலை வரை 1,02,44,852 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 95.99 சதவீதம் போ் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டனா்.
இப்போதைய சூழ்நிலையில் 2,62,272 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 2.56 சதவீதமாகும். தொடா்ந்து 9-ஆவது நாளாக கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 286 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,48,439 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 29-ஆம் தேதி வரை 17,09,22,030 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 11,20,281 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிதாக ஏற்பட்ட 286 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 68 போ் உயிரிழந்தனா். மேற்கு வங்கத்தில் 30, தில்லியில் 28, கேரளத்தில் 24 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.