முகப்பு
இந்தியா

ஷீரடி சாய்பாபா பாத்ரி

மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடி கிராமம் அமைந்துள்ளது. துறவியான சாய்பாபா தனது வாழ்நாளில் பெரும்பகுதியை ஷீரடியில்தான் கழித்தார் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:45 PM
பகிர்:

ஷீரடிக்கு நாள்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம். பண்டிகை காலங்களில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஷீரடிக்கு வருகை தருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடி கிராமம் அமைந்துள்ளது. துறவியான சாய்பாபா தனது வாழ்நாளில் பெரும்பகுதியை ஷீரடியில்தான் கழித்தார் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 1918-ஆம் ஆண்டு தசரா தினத்தன்று அவர் முக்தியடைந்தார். அவரது நினைவாக ஷீரடியில் கோயில் எழுப்பப்பட்டது. சாய்பாபாவின் சமாதியும் ஷீரடியிலேயே உள்ளது.


அதே வேளையில், மகாராஷ்டிர மாநிலம், பர்பணி மாவட்டத்திலுள்ள பாத்ரி என்ற இடத்தில்தான் சாய்பாபா பிறந்ததாக சிலர் கருதுகின்றனர். பாத்ரி பகுதியில் "சாய் ஜன்மஸ்தான் (பிறந்த இடம்)' என்ற பெயரிலான கோயில் கடந்த 1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி அமைக்கப்பட்டது. 
எனினும், சாய்பாபா பிறந்த இடத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வரலாற்று ஆவணங்களில் கிடைக்கவில்லை. எனவே, "சாய்பாபா எங்கள் இடத்தில்தான் பிறந்தார்' என்று ஷீரடி பகுதி மக்களும், பாத்ரி பகுதி மக்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, அவ்வப்போது சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசின் அமைச்சரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது, பர்பணி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர், பாத்ரி பகுதியை சாய்பாபா பிறந்த இடமாக அறிவித்த மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அப்பகுதியை ஷீரடியைப் போல் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ரூ.100 கோடியை ஒதுக்கினார்.   

ஷீரடியில் எதிர்ப்பு 
மாநில முதல்வரின் இந்த அறிவிப்பு, ஷீரடி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாத்ரி பகுதியை சாய்பாபாவின் பிறந்த இடமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஷீரடி பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், கடந்த மாதம் 19-ஆம் தேதி காலவரையற்ற முழுஅடைப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். 
முழுஅடைப்பின் காரணமாக, ஷீரடியிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அறிவிப்புக்கு, சிவசேனை கட்சியைச் சேர்ந்த ஷீரடி தொகுதி எம்.பி. சதாசிவ லோகண்டே எதிர்ப்பு தெரிவித்தார். முழுஅடைப்புப் போராட்டத்தில் நேரில் பங்கேற்று, ஷீரடி பகுதி மக்களுக்கு அவர் ஆதரவளித்தார்.
அதே வேளையில், முதல்வரின் அறிவிப்புக்கு பாத்ரி பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஷீரடியில் முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்ற நேரத்தில், பாத்ரியில் பஜனைகள் நடைபெற்றன. சாய்பாபாவின் பெருமை குறித்த பாடல்களை பாத்ரி பகுதி மக்கள் பாடி மகிழ்ந்தனர். 

முதல்வர் பேச்சுவார்த்தை 
ஷீரடியில் முழுஅடைப்புப் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக ஷீரடி மக்கள் அறிவித்தனர். 
பாத்ரி பகுதியை சாய்பாபாவின் பிறந்த இடமாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்ததற்கும், ஷீரடி மக்கள் அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
இந்தியாவின் செல்வ வளமிக்க கோயில்களில் ஷீரடியும் ஒன்று. ஷீரடிக்கு நாள்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம். பண்டிகை காலங்களில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஷீரடிக்கு வருகை தருகின்றனர். ஷீரடி கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.300 கோடி நன்கொடை கிடைக்கிறது. 


பொருளாதார முக்கியத்துவம்
 மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் ஷீரடி விளங்கி வருகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, ஷீரடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் பொருளாதார வளர்ச்சியானது, சாய்பாபா கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் எண்ணிக்கையைப் பொருத்தே அமைந்துள்ளது.
முக்கிய சுற்றுலாத் தலமாதலால், ஷீரடியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைக் கருத்தில்கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே, பாத்ரி பகுதியையும் ஷீரடியைப் போல் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கில், அப்பகுதியை சாய்பாபாவின் பிறப்பிடமாக அறிவித்து, அப்பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.100 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டார். 
ஆனால், சாய்பாபா பிறந்த இடமாக பாத்ரி பகுதி அறிவிக்கப்பட்டால், ஷீரடிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையும் என்றும், இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை முழுவதும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே சுழல்கிறது. 
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே, பாத்ரி பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக உறுதியளித்துள்ளார். ஷீரடி மக்களும் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர். ஆகமொத்தத்தில், சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சையும் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. 

சர்ச்சை அவசியமற்றது-சிவசேனை
சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை குறித்து சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டதாவது:
"பாத்ரி தான் சாய்பாபாவின் பிறப்பிடம்' என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தாமாக முன்வந்து கூறவில்லை. சில வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றின் அடிப்படையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சையை எழுப்புவது அவசியமற்றது. 
சாய்பாபா கோயில் அறக்கட்டளை நாள்தோறும் லட்சக்கணக்கில் நன்கொடை பெறுகிறது. சாய்பாபாவின் காரணமாக ஷீரடி செல்வ வளம் பெற்றது. ஷீரடியில்தான் சாய்பாபா முக்தியடைந்தார். எனவே, ஷீரடியின் பெருமையை யாராலும் பறித்துவிட முடியாது. 
இந்த சர்ச்சைக்காக முதல்வர் உத்தவ் தாக்கரேவை குற்றஞ்சாட்டுவது முறையல்ல. ஷீரடி, பாத்ரி பகுதிகளைச் சேர்ந்த மக்களும் சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக சர்ச்சையை எழுப்பக் கூடாது. இது பக்தர்களின் வருகையைக் குறைக்கும் என்று அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டது.

நூற்றாண்டு விழா


ஷீரடியில் சாய்பாபா கோயில் எழுப்பப்பட்டதன் நூற்றாண்டு விழா, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த விழாவின்போது, சாய்பாபா சமாதி அடைந்ததன் நூற்றாண்டைக் குறிப்பிடும் வகையில் வெள்ளி நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

ஆதரவுக் குரல்கள்

பாத்ரி பகுதிதான் சாய்பாபா பிறந்த இடம். முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
- மாநில அமைச்சர் 
அசோக் சவாண்.

ஷீரடியின் வளர்ச்சிக்கு சுற்றுலாவே முக்கியப் பங்களித்தது. விமான நிலையம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ரயில் போக்குவரத்து வசதிகள், விடுதிகள் உள்ளிட்டவை ஷீரடியில் ஏற்படுத்தப்பட்டன. பாத்ரி பகுதி வளர்ச்சியடைந்துவிட்டால், தங்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று ஷீரடி மக்கள் அச்சப்படுகின்றனர். சாய்பாபாவின் "ஜன்மபூமி' பாத்ரி; "கர்மபூமி' ஷீரடி. இரண்டு பகுதிகளும் சாய்பாபாவின் பக்தர்களுக்கு முக்கியமானவை.
- பாத்ரி கோயில் 
அறக்கட்டளை உறுப்பினர் பாபாஜானி துர்ரானி.

சாய்பாபா பிறந்த இடம் பாத்ரிதான் என்பதை உறுதிப்படுத்தும் 29 ஆவணங்கள் பாத்ரி கோயில் அறக்கட்டளை வசம் உள்ளன.
- பர்பணி தொகுதி எம்.பி. 
சஞ்சய் ஜாதவ். 

நடுநிலை குரல்கள்

""சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் அனைவரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடுநிலையான முடிவை முதல்வர் உத்தவ் தாக்கரே எடுப்பார்''
- மாநில துணை முதல்வர் அஜித் பவார்.

""சாய்பாபா குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் எங்கும் நிறைந்திருப்பவர். உலகம் முழுவதும் அவரது பெருமை பரவியுள்ளது. பல்வேறு இடங்களில் அவருக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவரது பிறந்த இடம் தொடர்பாக சர்ச்சை எழுப்புவது அவசியமற்றது. இந்த சர்ச்சை காரணமாக வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துவது முறையல்ல. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது''
- மாநில அமைச்சர் சகன் புஜ்பல். 

எதிர்ப்புக் குரல்கள்

சாய்பாபா ஷீரடியைச் சேர்ந்தவர். நான் முதலில் சாய்பாபா பக்தன்; பின்னர்தான் மக்களவை உறுப்பினர். ஷீரடி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறேன். சாய்பாபா தன் பதினாறாவது வயதில் ஷீரடிக்கு வந்தார். தனது ஜாதி, மதம் தொடர்பான விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. அவரின் பெயரில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது.
- சிவசேனை எம்.பி. 
சதாசிவ லோகண்டே.

சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக சிவசேனை தலைமையிலான மாநில அரசு சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதல்வரின் கருத்தில் உண்மையில்லை. அவரது கருத்து, ஷீரடி மக்கள், சாய்பாபா பக்தர்கள் உள்ளிட்டோரின் மனதைப் புண்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடவும் தயாராக உள்ளேன்.
- பாஜக எம்.பி. 
சுஜய் விகே பாட்டீல்.

அரசியல்வாதிகளால் முதல்வர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். சாய்பாபாவுக்கு கோயில் அமைந்துள்ள இடங்களில் பாத்ரியும் ஒன்று. 
சாய்பாபா பிறந்த இடமாக பாத்ரியை ஏற்க முடியாது. முதல்வர் உத்தவ் தாக்கரே தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
- பாஜக எம்எல்ஏ 
ராதாகிருஷ்ண விகே பாட்டீல். 

பாத்ரி பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்குவதில் எங்களுக்கு எந்தவிதப் பிரச்னையுமில்லை. ஆனால், சாய்பாபாவின் பிறந்த இடமாக பாத்ரியை அறிவிக்கக் கூடாது. 
- ஷீரடி கிராமத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.