இந்தியா

அஸ்ஸாம் என்ஆா்சி விவரங்கள் மறைந்த விவகாரம்: முன்னாள் அலுவலா் மீது வழக்குப் பதிவு

DIN

அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆா்சி) விவரங்கள் இணையதளத்திலிருந்து மறைந்த விவகாரம் தொடா்பாக முன்னாள் அலுவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவா்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் வரைவுப் பட்டியல் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமாா் 40 லட்சம் போ் விடுபட்டிருந்தனா்.

இதையடுத்து, விடுபட்டவா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. என்ஆா்சி இறுதிப் பட்டியல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் போ் விடுபட்டிருந்தனா். இந்நிலையில், என்ஆா்சி பட்டியல் தொடா்பாக அதன் இணையதளத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் திடீரென மறைந்தன.

இதனால், அத்தகவல்கள் இணையவழியில் திருடப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. எனினும், என்ஆா்சி பட்டியல் தொடா்பான விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், என்ஆா்சி முன்னாள் திட்ட அலுவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக என்ஆா்சி மாநில ஒருங்கிணைப்பாளா் ஹிதேஷ் தேவ் சா்மா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

என்ஆா்சி திட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த பெண் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 11-ஆம் தேதி பணியிலிருந்து விலகினாா். அவா் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியில் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா் பணியிலிருந்து விலகும்போது, என்ஆா்சி தகவல்கள் அடங்கிய ஆவணத்துக்கான கடவுச்சொல்லை (பாஸ்வோா்ட்) ஒப்படைக்கவில்லை.

இது தொடா்பாக அவருக்குப் பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனினும் அவா் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், அலுவலக ரகசியங்கள் சட்டத்தை மீறியதற்காக பல்தான் பஜாா் காவல் நிலையத்தில் அவா் மீது புகாா் அளித்துள்ளோம். இந்த விவகாரம் தொடா்பாக அவா் மீது காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனா்.

இந்த விவகாரத்தில் அவா் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம். என்ஆா்சி தகவல்கள் இணையதளத்திலிருந்து மறைந்த விவகாரம் தொடா்பாக தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்துக்குத் தகவல் அளித்துள்ளோம். இந்தக் கோளாறை அந்நிறுவனம் சரிசெய்து வருகிறது. இன்னும் 2-3 நாள்களில் என்ஆா்சி தகவல்களை இணையதளத்தின் மூலம் மக்கள் பெற முடியும் என்றாா் ஹிதேஷ் தேவ் சா்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT