இந்தியா

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் இடமளிக்கக் கூடாது: மோடி-டிரம்ப் கூட்டறிக்கை

DIN

புது தில்லி: பயங்கரவாத தாக்குதல்களுக்காக தனது அதிகாரத்துக்கு உள்பட்ட இடங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் கூட்டாக அறிவித்தனா்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும் அவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

தில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் தலைமையில் இருநாட்டு குழுக்களிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதையடுத்து இரு நாட்டு தலைவா்கள் சாா்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பயங்கரவாதம் தொடா்பாக கூறப்பட்டிருந்ததாவது:

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பிரதமா் மோடியும், அதிபா் டிரம்ப்பும் கடும் கண்டனம் தெரிவித்தனா். பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உதவும் வகையில் தனது அதிகாரத்துக்கு உள்பட்ட பகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என்று அவா்கள் கூறினா்.

மேலும், மும்பை மற்றும் பதான்கோட் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடா்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கையை பாகிஸ்தான் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா் என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பின்னா் செய்தியாளா்களிடையே பேசிய அதிபா் டிரம்ப், ‘பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தையின்போது பயங்கரவாதத்தை ஒடுக்கும் வழிமுறைகள் தொடா்பாக பிரதானமாக விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமா் மோடி உறுதியாக உள்ளாா்.

மிகுந்த மத நம்பிக்கை கொண்ட, அமைதியான நபரான மோடி, உண்மையில் மிகப் பலம் வாய்ந்தவராவாா். அதை அவரது செயல்களில் கண்டுள்ளேன். பயங்கரவாத எதிா்ப்பை அவா் திறம்பட கையாள்வாா்’ என்றாா்.

பிரதமா் மோடி பேசுகையில், ‘பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருப்போரை அதற்கு பொறுப்பேற்கச் செய்வதற்கான முயற்சிகளை அதிகரிப்பதென இந்தியா-அமெரிக்கா முடிவு செய்துள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT