வடகிழக்கு தில்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துவிட்டதாக ஜிடிபி அரசு மருத்துவமனை வட்டாரங்
புது தில்லி: வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துவிட்டதாக ஜிடிபி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
189 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 11 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் குண்டடிபட்டு அபாய நிலையில் உள்ளார்.
செவ்வாய்க்கிழமை வரை வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக இருந்த நிலையில், இன்று 22 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, தலைநகர் புது தில்லியில் வன்முறை இந்த அளவுக்குப் பரவியதற்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது. நிலைமை கைமீறி செல்லும் அளவுக்கு ஏன் விட்டுவிட்டீர்கள் என்று மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தில்லி முதல்வரும் துணை முதல்வரும் செல்ல வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தில்லி முதல்வரும், துணை முதல்வரும் நேரில் செல்ல வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்க இது ஒன்றே வழி.
சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது. இப்போராட்டத்துக்கு பதிலடியாக ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் வன்முறை நீடித்தது. இதன் காரணமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மெளஜ்பூர், பிரம்மபுரி, கஜோரி காஸ், பஜன்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைப் பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். எனினும், ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து ஏற்பட்டது. வன்முறையாளர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும், பொது சொத்துகளுக்கும் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் சாலைகள் முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன.