நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: நிலை அறிக்கை கோரும் நீதிமன்றம்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திகார் சிறை நிர்வாகத்துக்கு
புது தில்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திகார் சிறை நிர்வாகத்துக்கு தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருப்பது தொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்த நிலை அறிக்கையை திகார் சிறை நிர்வாகம் நாளைக்குள் அளிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை தில்லி அரசு இன்று நிராகரித்த நிலையில், அந்த மனுவை தில்லி ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். தற்போது முகேஷ் சிங்கின் கருணை மனு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.