இந்தியா

மோடி அரசு சிஏஏவை திரும்பப் பெறாது: அமித் ஷா

DIN


சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றாலும் மோடி அரசு அதைத் திரும்பப் பெறாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் இன்று (செவ்வாய்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றாலும், இந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:

"நாங்கள் எதிர்ப்பால் வளர்க்கப்பட்டோம். எனவே, எதிர்ப்பைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கு ஹிந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் மொத்தம் 23 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், இன்றைக்கு இந்த எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்ல மதமாற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பலர் அரண்மனை வீடுகளை விட்டு தற்போது குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி அவர்களுக்கு வீடுகளை மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், நல்வாழ்வையும் அமைத்துத் தருகிறார். இது தவறா? 

ஆப்கானிஸ்தானில் தலித்துகள் துன்புறுத்தப்படுகின்றனர். அங்கு மிகப் பெரிய புத்தர் சிலை சிதைக்கப்பட்டுள்ளது. தலித்துகளின் பாதுகாவலராகக் குறிப்பிடும் மாயாவதி இதுபோன்ற விவகாரங்களில் ஏன் மௌனம் காக்கிறார்.

இந்தியா இரண்டு துண்டுகளானதற்கு காங்கிரஸ்தான் காரணம். இந்தத் தலைவர்கள் வரலாற்றைப் படித்திருக்கிறார்கள்? பாகிஸ்தானில் ஹிந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால், இந்தியா அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என காந்தியே கூறியிருப்பது இவர்களுக்குத் தெரியுமா? இந்தத் தலைவர்கள் படிக்கமாட்டார்கள். வெறும் பேச்சு மட்டும்தான்.

தலித் வங்காள குடும்பத்துக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவர் (மம்தா பானர்ஜி) சிஏஏவை எதிர்க்கிறார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் போராடும் விதத்தைப் பார்த்தால், அவர்களுக்கு இம்ரான் கானுடன் (பாகிஸ்தான் பிரதமர்) தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது. ஏனென்றால், அவர்களுடைய எதிர்ப்பு தேச நலனைச் சார்ந்ததாக இல்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT