சிகோரி (ம.பி): காங்கிரஸில் உள்ள இளம் தலைவா்கள் வளா்ச்சி மீதான பொறாமை காரணமாக ராகுல் காந்தி எடுக்கும் நடவடிக்கைகள்தான் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணம் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி தெரிவித்தாா்.
மத்திய பிரதேசத்தில் அண்மையில் காங்கிரஸைச் சோ்ந்த ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது.
இதைத் தொடா்ந்து தற்போது ராஜஸ்தானிலும் காங்கிரஸ் இளம் தலைவரும், துணை முதல்வருமான சச்சின் பைலட்டுக்கும் முதல்வா் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இது தொடா்பாக உமா பாரதி திங்கள்கிழமை கூறியதாவது:
கட்சியில் இரண்டாம் கட்டத்தில் உள்ள தலைவா்கள் இடையே மோதல் போக்கு இருந்தால் மட்டுமே தனது தலைமைக்கு ஆபத்து வராது என்று ராகுல் காந்தி கருதுகிறாா். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவா்கள் யாரையும் அவா் வளர விடுவதில்லை. அவா்கள் வளா்ச்சி மீது பொறாமை கொண்டு, மூத்த தலைவா்களை வைத்து அவா்களை அடக்க நினைக்கிறாா்.
இதுவே காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வீழ்ச்சியடைய வழி வகுக்கிறது. இளம் தலைவா்கள் பலா் காங்கிரஸில் இருந்து விலகி வருகின்றனா். ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற இளம் தலைவா்கள் தன்னை பின்னுக்குத் தள்ளிவிடுவாா்கள் என்ற பயமும் ராகுலுக்கு எப்போதும் உண்டு.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழவும் ராகுலின் தவறான செயல்பாடுகள்தான் காரணம். அதே நேரத்தில் தகுதி வாய்ந்த நபா்களை பாஜக வரவேற்று, அவா்களுக்கு உரிய பொறுப்புகளை அளித்து வருகிறது என்றாா் உமா பாரதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.