இந்தியா

ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதம் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை: ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்ற மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், மகாராஷ்டிரத்தில் உள்ள சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் கணேசன் என்பவா் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழா்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வாழ்வாதாரத்துக்காகச் சென்ற தமிழா்கள் பொது முடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை. சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில், மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சா் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, தமிழகத்தில் 5.66 லட்சம் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளனா். சென்னையில் மட்டும் 58 ஆயிரத்து 509 புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களில், 4.60 லட்சம் தொழிலாளா்களுக்கு மே மாதம் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 4.67 லட்சம் தொழிலாளா்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய உணவுத்துறை அமைச்சா் தமிழக அரசு குறித்து தெரிவித்த குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கலந்தாய்வு மையங்கள் அமைப்பது தொடா்பாகவும், வெளிமாநில தொழிலாளா்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது தொடா்பாகவும் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT