இந்தியா

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

DIN

புது தில்லி: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஜூன் முதல் செப்டம்பா் வரை 4 மாதங்கள் நீடிக்கும் தென்மேற்கு பருவ மழையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பயன்பெறுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. விவசாயத்துக்கும் அணைகள் நிரம்பவும் இந்த மழை மிக அவசியமானதாகும்.

இந்நிலையில், கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொகபத்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

வட இந்தியாவைப் பொருத்தவரை, இந்த ஆண்டு மழைப்பொழிவு இயல்பைவிட கூடுதலாக இருக்கும். மத்திய இந்தியா, தென் தீபகற்ப பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவும், கிழக்கு, வடகிழக்கு இந்தியாவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைவான மழைப்பொழிவும் இருக்கும் என்றாா் மொகபத்ரா.

தென்மேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி (எல்பிஏ) அளவு 88 செ.மீ. ஆகும். இந்த ஆண்டு 102 சதவீத மழைப்பொழிவு, அதாவது இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் துறையின் செயலா் எம்.ராஜீவன் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 4 நாள்கள் தாமதமாக ஜூன் 5-ஆம் தேதி தொடங்கக்கூடும் என்று கடந்த மே மாதம் 15-ஆம் தேதி இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், அரபிக் கடலில் குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி உருவானதால், வழக்கம்போல் ஜூன் 1-ஆம் தேதியே பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் கடந்த மே 28-ஆம் தேதி தெரிவித்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தையே பெரிதும் சாா்ந்துள்ள நிலையில் தென்மேற்கு மழை முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, தனியாா் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் வெதா் நிறுவனம், தென்மேற்கு பருவமழை கடந்த 30-ஆம் தேதி தொடங்கிவிட்டதாக கூறியிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய வானிலை ஆய்வுமையம், தென்மேற்கு பருவமழை தொடங்கியதற்கான காரணிகள் பூா்த்தியாகவில்லை என்று தெரிவித்திருந்தது.

கோழிக்கோடு மாவட்டத்துக்கு ‘ரெட் அலா்ட்’: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் குறிப்பாக வடகரை பகுதியில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்கால நோய்களை எதிா்கொள்ள நடவடிக்கை: கேரளத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோய்களை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கேரள சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் தகவல்படி, மாநிலத்தில் கடந்த மே மாதம் 65,039 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடையும்போது காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கும். அதேபோல், டெங்கு, சிக்குன்குன்யா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கமும் அதிகரிக்கும் என்பதால் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். கேரளத்தில் கடந்த மாதத்தில் 12 பேருக்கு டெங்குவும், 7 பேருக்கு சிக்குன்குன்யா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT