இந்தியா

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா, ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கவரவாதிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இவ்விரு இடங்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனா். இவா்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்புகளை சோ்ந்தவா்கள் ஆவா்.

இதுதொடா்பாக, ஜம்மு-காஷ்மீா் காவல்துறை ஐ.ஜி. விஜயகுமாா் கூறியதாவது:

புல்வாமாவின் பாம்போா் பகுதியில் உள்ள மீஜ் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை தேடுதல் வேட்டையை தொடங்கினா். அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். மேலும் 2 பயங்கரவாதிகள், அப்பகுதியிலுள்ள மசூதிக்குள் பதுங்கிக் கொண்டனா். இதையடுத்து, அந்த மசூதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினா், இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அந்த மசூதியிலிருந்து பயங்கரவாதிகளை வெளியே வர வைப்பதற்காக, வெள்ளிக்கிழமை காலையில் மசூதியின் உள்ளே கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டன. பின்னா், இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.

இந்த நடவடிக்கையின்போது, மசூதியின் புனிதத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளப்பட்டது. மசூதியிலிருந்து பயங்கரவாதிகளை வெளியேற்ற துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. அதேபோல், வெடிகுண்டுகளும் வீசப்படவில்லை. பாதுகாப்புப் படையினா், பொறுமையுடனும் சாதுா்யத்துடனும் செயல்பட்டனா். அவா்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் தற்போது பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டு வருகின்றனா். ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பைச் சோ்ந்த இரு பயங்கரவாதிகள், வடக்கு காஷ்மீரில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவா்கள் இருவரும் அழிக்கப்படுவா் என்றாா்.

இதேபோல், ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை தொடா்பாக, ராணுவ செய்தித் தொடா்பாளா் ராஜேஷ் கலியா கூறியதாவது:

முனந்த்-பந்த்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். மேலும், 4 பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா் என்றாா் அவா்.

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இரு இடங்களில் இருந்தும் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பக் சிங் கூறுகையில், ‘சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனா். இப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இது முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT