இந்தியா

முதலில் உத்தவ், தற்போது அஜித் பவார், நாளை காங்கிரஸ்: சிஏஏ புரிதல் குறித்து மகாராஷ்டிர பாஜக கருத்து

DIN


குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து முதலில் உத்தவ் தாக்கரே புரிந்துகொண்டார், தற்போது அஜித் பவார் புரிந்துகொண்டுள்ளார், நாளை காங்கிரஸும் புரிந்துகொள்ளும் என மகாராஷ்டிர பாஜக தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஷகீன் பாக் உட்பட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டோடு இணைத்துப் பார்த்தால் பலரது குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் என சிஏஏ-வை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. 

அதேசமயம், இந்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றன. இது மகாராஷ்டிரத்திலும் எழுந்து வருகிறது. பிகாரைப் போல் மகாராஷ்டிர சட்டப்பேரவையிலும் சிஏஏ மற்றும் என்பிஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   

இந்தச் சூழலில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் சிஏஏ குறித்து திங்கள்கிழமை தெரிவிக்கையில், "இந்த சட்டங்கள் எந்தவொரு மகாராஷ்டிர மக்களையும் பாதிக்காது என கடந்த காலங்களில் நான் பலமுறை கூறியுள்ளேன், மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசும் தெரிவித்துவிட்டது. மற்ற மாநிலங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என உதாரணங்களைக் காட்சி மாநிலத்தின் சூழலைக் கெடுக்க வேண்டாம்" என்றார்.

இருப்பினும், சமாஜவாதி சட்டப்பேரவை உறுப்பினர் அபு அஸ்மி தெரிவிக்கையில், "சிஏஏ மற்றும் என்பிஆர் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கோரிக்கை வைப்பதன் மூலமாக எந்தவொரு சூழலையும் நாங்கள் கெடுக்கவில்லை. எங்கள் கட்சித் தலைவர்கள் துணை முதல்வரைச் சந்திக்க அனுமதி கோரி சிஏஏ மற்றும் என்பிஆர்-இல் இருக்கும் அச்சுறுத்தல்களை எடுத்து விளக்குவார்கள்" என்றார்.

இந்நிலையில், அஜித் பவாரின் கருத்தை வரவேற்பதாக மகாராஷ்டிர பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "அஜித் பவாரின் நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். முதலில் சிஏஏ குறித்து உத்தவ் தாக்கரே புரிந்துகொண்டார், தற்போது அஜித் பவாரும் புரிந்துகொண்டுள்ளார். பின்னர் காங்கிரஸும் இதைப் புரிந்துகொள்ளும். இந்த சட்டம் நாட்டில் உள்ள யாரையுமே பாதிக்காது என்பதை பிரதமர் முதல் நாளில் இருந்தே தெரிவித்து வருகிறார்" என்றார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, "சிஏஏ, என்பிஆர் ஆகியவை தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை. இந்த நடவடிக்கைகளால் நாட்டிலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT