வாரிசு அரசியலை நிராகரியுங்கள்: பிகாரில் பிரதமர் மோடி பிரசாரம்
நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலை பிகார் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலை பிகார் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிகாரின் சாப்ரா, சமஸ்திபூர் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் பேசியதாவது:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் அண்டை நாடு (பாகிஸ்தான்) இருந்த உண்மையை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் சிலரும் உயிரிழந்தனர்.
பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, அண்டை நாட்டின் பின்னணி பற்றி கண்டுகொள்ளாத எதிர்க்கட்சியினர், தேவையற்ற கருத்துகளைக் கூறி அரசை விமர்சித்தனர். அந்த சம்பவம் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற அவர்களின் முகமூடி இப்போது கிழித்தெறியப்பட்டுள்ளது. அவர்களின் உண்மையான முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது. அவர்கள்தான் இப்போது உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். இதுபோன்ற நபர்களிடம் வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியர்கள் பலர் தங்கள் குடியுரிமையை இழந்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறினர். ஆனால் அந்தச் சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டாகி விட்ட நிலையில், ஒருவர்கூட தங்கள் குடியுரிமையை இழக்கவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்பின. ஆனால் இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பப்படுவதை கொண்டாட வேண்டிய நேரம் இது. இந்த வேளையில், "ராமர் அவதரித்தாரா' எனக் கேள்வி எழுப்பி கோயில் கட்டப்படுவதற்கு எதிராக தடைகளை உருவாக்க முயன்றவர்களை நாம் மறந்துவிடக் கூடாது.
பிகார் தேர்தலில் இரண்டு கூட்டணிகள் போட்டியிடுகின்றன. ஒன்று, ஜனநாயகம் தழைக்கப் பாடுபடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி. மற்றொன்று, வாரிசு அரசியலுக்காக அர்ப்பணித்துக் கொண்ட கூட்டணி. இங்கு ராஷ்டிரீய ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்துள்ளன.
தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்கள் ஏழைகளைப் பற்றி அக்கறையாகப் பேசுவார்கள். தேர்தல் முடிந்ததும் ஏழைகளை மறந்துவிடுவார்கள். பிகார் தேர்தலில் அவர்கள் தோல்வியடைவது உறுதி.
தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி ஆகிய இரு இளவரசர்களும் தங்களது சிம்மாசனங்ளைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர். மத்தியிலும், இந்த மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் உள்ளது. இரு அரசுகளும் இரட்டை என்ஜின்களை போல் செயல்பட்டு இங்கிருந்த இருளை நீக்கி வளர்ச்சியை கொண்டு வந்துள்ளது.
ஒருபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனநாயகக் கொள்கைகளில் உறுதிபூண்டு பணியாற்றி வருகிறது. மற்றொரு புறம், வாரிசு அரசியலையே நம்புவோர் உள்ளனர். வாரிசு அரசியலை நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை. முதல்வர் நிதீஷ்குமாரின் உறவினரோ அல்லது என்னுடைய உறவினரோ நாடாளுமன்றப் பதவிக்கு அனுப்பப்படவில்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
முதல்வர் நிதீஷ்குமார் ஆட்சியில் பிகாரில் பெருமளவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் சில நாள்களில் வரவிருக்கும் சத் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட முடியுமா என்று தாய்மார்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக இந்த மகன் (பிரதமர்) தில்லியில் பணியாற்றிக்கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளில் அவரின் தியாகங்களை நாம் நினைவு கூர்ந்தோம். ஆனால், காங்கிரஸ்காரரான படேலின் பிறந்த நாளை அக்கட்சி கொண்டாடவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கிராமப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் பத்திரிகைப் பேட்டி குறித்து சமூக வலைதளத்தில் வைரலான விடியோ பற்றி இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அந்த மூதாட்டி, பிரதமர் மோடி எங்களுக்காக எவ்வளவோ நல்லதைச் செய்திருக்கிறார்; அப்படியிருக்கும்போது நாங்கள் அவருக்குத்தான் வாக்களிப்போம் என்று சரளமாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சு என்னைப் பெரிதும் கவர்ந்தது. பெரும்பாலான வாக்காளர்களின் கருத்தை அவர் பிரதிபலித்துள்ளார் என்றார் மோடி.