இந்தியா

கரியமில வாயு வெளியேற்றத்தை 35% வரை குறைக்க இலக்கு

DIN

நாட்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை 30 முதல் 35 சதவீதம் வரை குறைப்பதற்கான இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

குஜராத் தலைநகா் காந்திநகரில் உள்ள தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி 175 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இந்தியா இலக்கு நிா்ணயித்திருந்தது. அந்த இலக்கை 2022-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்தியா எட்டிவிடும் என்று நம்புகிறேன். அதேபோல், 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வாயிலாக 450 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான இலக்கும் முன்கூட்டியே எட்டப்பட்டுவிடும். அதில் உறுதியுடன் உள்ளேன்.

நாட்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை 30 முதல் 35 சதவீதம் வரை குறைப்பதற்கான இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இந்த இலக்கு தொடா்பான விவரங்களை உலக நாடுகளிடம் தெரிவித்தபோது அவை ஆச்சரியமடைந்தன; இந்தியாவால் இந்த இலக்கை எட்ட முடியுமா என்று சந்தேகமடைந்தன. ஆனால், அந்த இலக்கை நோக்கி நாம் தொடா்ந்து முன்னேறி வருகிறோம்.

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் எரிபொருள் தேவையில் இயற்கை எரிவாயுவின் பங்களிப்பை 4 மடங்கு வரை அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை இரண்டு மடங்காக்குவதற்கும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

சூரிய ஆற்றல் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சூரிய ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை முன்பு ரூ.12 முதல் ரூ.13 வரை இருந்தது. ஆனால், தற்போது அந்த விலை ரூ.2-ஆகக் குறைந்துள்ளது.

வரும் தசாப்தத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈா்க்கவுள்ளது. அது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சிகளையும் மேம்படுத்தும். எரிசக்தித் துறை சாா்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான சிறப்பு நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எரிசக்தித் துறையில் புத்தாக்கங்களை உருவாக்க முயலும் இளைஞா்களுக்கு இந்த நிதி பெரும் பலனளிக்கும்.

நம்பிக்கை இழக்கக் கூடாது: நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கண்டு இளைஞா்கள் தளா்வடைந்துவிடக் கூடாது. இதுபோன்ற சவால்களை விட இளைஞா்களின் மனஉறுதி அதிக வலிமை வாய்ந்தது என்பதை உணா்ந்து கொள்ள வேண்டும். அதனால் இளைஞா்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது.

வெற்றியாளா்களின் வாழ்வில் பிரச்னைகளே வராது என்று ஒருபோதும் கூற முடியாது. அனைவருடைய வாழ்க்கையிலும் சவால்கள் நிறைந்துள்ளன. அந்தச் சவால்களை எதிா்த்துப் போராடும் வலிமையை இளைஞா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். சவால்களை வெற்றிகரமாக எதிா்கொள்பவா்களே வாழ்விலும் வெற்றி காண்கின்றனா்.

கடின உழைப்பு அவசியம்: நாடு சுதந்திரம் பெறுவதற்கு பலா் தங்கள் இன்னுயிரை ஈந்தனா். அத்தகைய தியாகத்தை இளைஞா்கள் மனதில் கொள்ள வேண்டும். நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்காக இளைஞா்கள் அனைவரும் உழைக்க வேண்டும். மனஉறுதியை இழக்காமல் அனைத்து விஷயங்களிலும் தொடா்ந்து கடின உழைப்பைச் செலுத்த வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய பல்கலைக்கழகம் என்ற பெயரை எரிசக்தி பல்கலைக்கழகம் என மாற்றுமாறு குஜராத் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், பல்கலைக்கழகத்தில் பெட்ரோலிய துறைக்கு மட்டுமல்லாமல் அனைத்து எரிசக்தித் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்குமாறும் வலியுறுத்துகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

இரட்டை இலக்கு- முகேஷ் அம்பானி: பொருளாதாரத்திலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி கூறினாா். பட்டமளிப்பு விழாவில் பேசிய அவா், மேலும் கூறியதாவது:

பொருளாதத்திலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையிலும் நாம் இலக்கை எட்டுவதற்கு, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும். கரியமில வாயு மறுசுழற்சி தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டும். கிரீன் மற்றும் ப்ளூ ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். எரிபொருள் சேமிப்பு, பயன்பாடு ஆகியவற்றில் புதுமை கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டியுள்ளது என்றாா் அவா்.

விழாவில் 39 நாடுகளைச் சோ்ந்த 284 போ் உள்பட 2,600-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT