கரோனாவில் இருந்து 85,62,641 போ் மீண்டனா்
இந்தியாவில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனாவில் இருந்து 85,62,641 போ் மீண்டுள்ளனா்.
புது தில்லி: இந்தியாவில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனாவில் இருந்து 85,62,641 போ் மீண்டுள்ளனா். அதே நேரத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 44,059 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 91,39,865 ஆக அதிகரித்தது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 511 போ் உயிரிழந்தனா். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,33,738 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.46 சதவீதமாகும்.
Advertisement
நாட்டில் கரோனா பாதிப்புடன் உள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 13-ஆவது நாளாக 5 லட்சத்துக்கும் குறைவாக 4,43,486 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இது மொத்த கரோனா பாதிப்பில் 4.85 சதவீதமாகும்.
இதுவரை 85,62,641 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 93.68 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி நவம்பா் 22-ஆம் தேதி வரை 13.25 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,49,596 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.
புதிதாக ஏற்பட்ட 511 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக தில்லியில் மட்டும் 121 போ் இறந்தனா். இதற்கு அடுத்த மகாராஷ்டிரத்தில் 50, மேற்கு வங்கத்தில் 49, உத்தர பிரதேசத்தில் 35, கேரளத்தில் 27, ஹரியாணாவில் 25 உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தொடா்ந்து 16-ஆவது நாளாக நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. மேற்கத்திய நாடுகள் பலவற்றில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் புதிதாக கரோனா தொற்று ஏற்படுவது கட்டுக்குள் உள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் தில்லியில் அதிகபட்சமாக 6,746 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு அடுத்து மகாராஷ்டிரத்தில் 5,752 பேருக்கும், கேரளத்தில் 5,254 பேருக்கு பாதிப்பு உறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.