மேற்குவங்கத்தில் மேலும் ஓர் அமைச்சருக்கு கரோனா
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஓர் அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், காவலர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சரான தபஸ் ராய்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (வியாழகிழமை) கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இரவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனால் அமைச்சர் தபஸ் ராயின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர். அமைச்சருக்கு தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர், தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், வனவிலங்குகள் நலத்துறை அமைச்சர் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.