காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஷ்பு, தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, கடந்த சில மாதங்களாக கட்சிக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தார். மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நலம் பெற வாழ்த்து கூறியது, அதிமுக முதல்வர் வேட்பாளரான முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாழ்த்து கூறியது என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்த குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது, ஆனால், அதனை மறுத்து வந்த குஷ்பு நேற்று திடீரென தில்லி புறப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கி கட்சி மேலிடம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. குஷ்புவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் தில்லி பாஜக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அவர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். உடன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இருந்தார்.
பின்னர் அங்கு பேசிய குஷ்பு, 'நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும். அதற்கு, பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவர் இருந்தால் மட்டுமே முடியும். அதை உணர்ந்த பின்னர் தான் நான் பாஜகவில் இணைத்துள்ளேன்' என்றார்.
2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி 2014 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.