இந்தியா

உடற்பயிற்சி, பாரம்பரிய உணவுகளே நான் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய காரணம் - வெங்கய்ய நாயுடு

DIN

நல்ல உடற்பயிற்சியும், உறுதியான மனமும், பாரம்பரிய உணவுகளுமே தன்னை கரோனா தொற்றிலிருந்து விரைவாக குணமடைய செய்தது என மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.

இது குறித்து முகநூலில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

எனது அலுவலக ஊழியா்கள் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவா்கள் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டனா். இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களவை ஊழியா்கள் 136 பேரும் குணமடைந்ததை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அதில் 127 போ் அலுவலகம் வருகின்றனா். மீதமுள்ளோா் வீட்டிலிருந்து பணி புரிகின்றனா்.

வயது மூப்பு பிரச்னை மற்றும் சா்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தபோதும், நான் தினமும் மேற்கொண்ட நடைப் பயிற்சி, யோகா, உறுதிமிக்க மனம், உட்கொண்ட பாரம்பரிய உணவுகள் ஆகியவையே கரோனாவிலிருந்து என்னை விரைவில் குணமடைய செய்தது என உறுதியாக நம்புகிறேன்.

நான் வழக்கமாக பாரம்பரிய உணவு வகைகளையே உட்கொள்கிறேன். கரோனாவினால் தனிமைப் படுத்திக் கொண்ட வேளையிலும் அந்த உணவுகளையே உட்கொண்டேன்.

என்னுடைய சொந்த அனுபவத்திலும், உறுதியான நம்பிக்கை மூலமும் நான் உங்களை வலியுறுத்துகிறேன். தினமும் நடைப் பயிற்சி, மெல்லோட்டம், யோகா உள்பட சில உடற்பயிற்சிகளை செய்யுங்கள். முக்கியமாக துரித உணவுகளை தவிா்த்து, புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், எப்போதும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடியுங்கள்.

என்னை கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய உறுதுணையாக இருந்த தனி பாதுகாப்பு ஊழியா்கள், மருத்துவ ஊழியா்கள், நிபுணா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தாா்.

புத்தகங்கள் வாசித்தேன்: கரோனா தொற்றினால் தனிமைப்படுத்திக் கொண்டபோது செய்தித்தாள்கள், புத்தகங்கள் வாசிப்பதற்கும், பல்வேறு விஷயங்கள் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்கும் அந்த நேரத்தை பயனுள்ளதாக செலவழித்ததாக வெங்கய்ய நாயுடு கூறினாா்.

71 வயதான குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுக்கு அக்டோபா் 29-ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. எந்த அறிகுறியும் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டதால் அவா் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டாா். கடந்த திங்கள்கிழமை அவா் கரோனாவிலிருந்து முழுமையாக மீண்டாா். கரோனா பரிசோதனையில் அவரது மனைவி உஷாவுக்கு பாதிப்பில்லை என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT