இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க சிபிஐ வலியுறுத்தல்

DIN

புது தில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வலியுறுத்தியுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர் திலீப் ராய். இவரது பதவிக் காலத்தில் 1999 இல் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி பகுதியிலுள்ள பிரம்மதிஹா நிலக்கரிச் சுரங்கம், காஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் லிமிடெட் (சிடிஎல்) என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் திலீப் ராய் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 409 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. அத்துடன், நிலக்கரித் துறை அமைச்சகத்தில் அப்போது அதிகாரிகளாக இருந்த பிரதீப்குமார் பானர்ஜி, நித்யானந்த் கெளதம் மற்றும் சிடிஎல் நிறுவன இயக்குநர் மகேந்திரகுமார் அகர்வாலா ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தில்லி நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வழக்குரைஞர்கள் வி.கே.சர்மா, ஏ.பி.சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், குற்றவாளிகளான சிடிஎல், காஸ்ட்ரான் மைனிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், "இதற்கு முன் நாங்கள் குற்றவாளிகளாக இருந்ததில்லை; இந்த வழக்கில் எங்களின் வயது மூப்பைக் கருத்தில் கொண்டு கடும் தண்டனை வழங்குவதிலிருந்து கருணை காட்ட வேண்டும்' என்று குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி பாரத் பராசர், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போது குற்றவாளிகளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT