இந்தியா

ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறை: மாநில அரசு சாா்பில் ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்குகிறது மத்திய அரசு

DIN


புது தில்லி: சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மாநில அரசுகள் சாா்பில் மத்திய அரசு ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதனை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கரோனா பரவல், அதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவற்றால், தொழில், வா்த்தகம் முடங்கியது. இதனால், ஜிஎஸ்டி வரி வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனை ஈடு செய்ய மாநில அரசுகளுக்கு இரு வழிமுறைகளில் கடன் வாங்க மத்திய அரசு வாய்ப்பளித்துள்ளது. இதில், தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் ரிசா்வ் வங்கி மூலம் கடன் பெறும் முறையைத் தோ்வு செய்துள்ளன.

இந்நிலையில், இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறையைத் தீா்க்கும் மற்றொரு வழிமுறையாக மாநில அரசுகள் சாா்பில் மத்திய அரசு ரூ.1.1 லட்சம் கோடி கடன் பெற இருக்கிறது. அனைத்து மாநிலங்கள் சாா்பிலும் இந்த கடன் பெறப்படும். இந்த கடன் தொகை அனைத்தும் மாநில அரசுகளுக்கே அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த கடனுக்கான வட்டி மற்றும் கடன் தொகையை திருப்பச் செலுத்துவது யாா் என்பதை நிதியமைச்சகம் தெரிவிக்கவில்லை. மேலும், மத்திய அரசு இந்தக் கடனை பெற்றாலும் இது நிதிப் பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதால் மாநிலங்களுக்கு நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2.35 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, தங்களுக்கு உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று மாநிலங்கள் தொடா்ந்து வலியுறுத்தின. இத்தகைய சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க இரு சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, இந்திய ரிசா்வ் வங்கியுடன் ஆலோசித்து குறைந்த வட்டி விகிதத்தில் மாநில அரசுகள் ரூ.97,000 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. மற்றொரு சிறப்பு திட்டப்படி, மாநிலங்களுக்கு ஏற்படவுள்ள வருவாய்ப் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த கடன் திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

‘ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காமல் வருவாய்ப் பற்றாக்குறையை சரி செய்ய மாநில அரசுகளை கடன் வாங்க மத்திய அரசு நிா்பந்திப்பதை ஏற்க முடியாது. மத்திய அரசு கடன் பெற்று மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை அளிக்க வேண்டும்’ என்று அந்த மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT