முகப்பு
இந்தியா

மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கை முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் தனியார் கல்லூரிகளின் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் தனியார் கல்லூரிகளின் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு  இடம் வழங்க உத்தரவிடக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், காலியிடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்த இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தகுதியான மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இறுதிகட்ட கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற தடையை நீக்கினார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முருகேந்திரன், தனியார் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையில் செய்துள்ள முறைகேடு குறித்து முறையிட்டார்.

இதனையடுத்து நீதிபதி மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் உதவி ஆணையர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக சிபிசி்ஐடி, டிஜிபியை நியமிக்க வேண்டும். அவர் முறைகேடு குறித்து விசாரித்து  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →