முகப்பு
இந்தியா

மசூத் அஸாரை வரும் 18-ஆம் தேதி கைது செய்ய பாக். நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடா்பான வழக்கில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா்

Updated On : 10 ஜனவரி 2021, 12:30 am IST
மசூத் அஸாா்.
பகிர்:

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடா்பான வழக்கில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரை வருகிற 18-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சி.ஆா்.பி.எஃப். வீரா்கள் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், அதுதொடா்பான நடவடிக்கையையும் எடுத்தது. குறிப்பாக, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட பாகிஸ்தான் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாப் காவல்துறையினா், லாகூரிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள குஜ்ரன்வாலாவில் தடைசெய்யப்ட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 6 பயங்கரவாதிகளை கைது செய்தனா். மேலும், அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘வழக்கை விசாரித்த நீதிபதி நடாஷா நசீம் சுப்ரா, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மசூத் அஸாரை வரும் 18-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும். ஒருவேளை அவரைக் கைது செய்யத் தவறினால், மசூத் அஸாரை குற்றவாளி என அதி அறிவிக்க நேரிடும் என்று உத்தரவிட்டாா்’ என்று கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.