இந்தியா

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் விடுவிப்பு

ANI

சத்தீஸ்கரில் கடந்த சனிக்கிழமை ராணுவத்துக்கும் நக்ஸல்களுக்கும் இடையே பாஸ்டர் சரகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது கடத்தப்பட்ட ராணுவ வீரர் விடுவிக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட ராணுவ வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், நேற்று புகைப்படம் வெளியிட்டிருந்த நக்ஸலைட்டுகள் இன்று அவரை விடுவித்திருப்பதாக காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஆர்பிஎஃப் படையில் உயரடுக்கு பிரிவான கோப்ரா படையின் 210 ஆவது பட்டாலியன் பிரிவில் (கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரிசோலிட் ஆக்ஷன்) காவலராகப் பணிபுரிபவர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா- பிஜாபூர் மாவட்ட எல்லையில் ராணுவத்துக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது காணாமல்போனார்.

இவரை கடத்தி வைத்திருப்பதாக நக்ஸலைட்டுகள் தகவல் தெரிவித்து, அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படத்தையும் நேற்று வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்  இன்று விடுவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

காணாமல்போன வீரர், பிஜாப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் வனப்பகுதியில் நக்ஸல்கள் எதிர்ப்புப் படையில் ஒரு அணியின் வீரராக வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்தார். சனிக்கிழமைதான் தேகல்கூடா-ஜோனகூடா கிராமங்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். பலியான 22 பேரில் கோப்ரா கமாண்டோ வீரர்கள் 7 பேர், பாஸ்டரியா பட்டாலியன் ராணுவ வீரர் ஒருவர், மாவட்ட வனக் காவலர்கள் 8 பேர், சிறப்பு அதிரடிப் படையினர் 6 பேர் அடங்குவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT