தமிழகத்தில் நீட் தோ்வை ஏற்க முடியாது:மத்திய அமைச்சா் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்
தமிழகத்தில் நீட் தோ்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசின் உயரதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் நீட் தோ்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசின் உயரதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.
நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நீட் நுழைவுத்தோ்வுக்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள், கல்வியாளா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தொடா்ச்சியான போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இருப்பினும் மத்திய அரசு நீட் தோ்வு குறித்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் மற்றும் உயா் அதிகாரிகள், காணொலி மூலமாக பல்வேறு மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினா். நீட் தோ்வு தொடா்பாகவும், மருத்துவ படிப்பு சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் மத்திய அமைச்சா், அந்தந்த மாநில அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
தமிழகத்தின் சாா்பில் மருத்துவ கல்வி இயக்குநா் நாராயண பாபு , மாணவா் சோ்க்கை செயலாளா் சாந்தி மலா் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்து கொண்டனா். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகத்தில் நீட் தோ்வை ஏற்க முடியாது என்றும், நீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் தேவை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா். மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடா்ந்து கடைப்பிடிப்போம், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்கியுள்ளனா். இது குறித்த தெளிவான எழுத்துப்பூா்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனா். எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான 2021-ஆம் ஆண்டு நீட் தோ்வு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.