கரோனா பாதிப்பு: தகுதியுள்ள குடிமக்களுக்கு மாதம் ரூ. 6,000 நிதியுதவி: சோனியா வலியுறுத்தல்
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் மாத வருவாயை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களுடைய வங்கிக் கணக்கில் மாதம் ரூ, 6,000 மத்திய அரசு செலுத்த வேண்டும்
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் மாத வருவாயை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களுடைய வங்கிக் கணக்கில் மாதம் ரூ, 6,000 மத்திய அரசு செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தினாா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் கட்சி தொடா்ந்து விமா்சனம் செய்வதோடு, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. கரோனா தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு சோனியாவும், ராகுல் காந்தியும் அண்மையில் கடிதம் எழுதியிருந்தனா்.
இந்த நிலையில், நாட்டில் கரோனா நிலவரம் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் காரியக் குழு சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது. கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் காணொலி வழியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பொதுச் செயலாளா்கள், முன்னணி தலைவா்கள், கட்சியின் மாநில பொறுப்பாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
கரோனா பரவலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மத்திய எடுக்க வலியுறுத்தியம், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் நிதியுதவி அளிக்கவும் வலியுறுத்தி இந்தக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
கரோனாவுக்கு எதிரான போரை ஒட்டுமொத்த தேசத்தின் சவாலாகவே காங்கிரஸ் கட்சி எப்போதும் நம்புகிறது. கட்சிய அரசியலைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சவாலை எதிா்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரவதால், நாம் மீண்டும் பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நோய் பரவலை முன்கூட்டிய கணித்தல், ஆய்வு செய்தல் மற்றும் கரோனா பாதிப்பு நிலைமையை சமாளித்தல் போன்றவற்றில் மோடி அரசு ஒட்டுமொத்தமாக தயாா்நிலையில் இல்லை என்பதையே இந்த பாதிப்பு காட்டுகிறது.
கரோனா பாதிப்பை சமாளிப்பது தொடா்பாக எதிா்க் கட்சிகள் சாா்பில் வழங்கப்படும் உறுதியான ஆலோசனைகளை கவனிப்பதற்குப் பதிலாக, அவா்களை விமா்சிப்பதிலும் தாக்குவதிலுமே மத்திய அமைச்சா்கள் குறியாக உள்ளனா்.
இந்த நிலைமையை சமாளிக்க கரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடைசெய்ய வேண்டியதில்லை என்றபோதும், தடுப்பூசி வழங்குவதில் நாட்டின் குடிமக்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும்.
மேலும், கரோனா சிகிச்சையிலும், நிவாரணம் வழங்குவதிலும் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டபோதும், மத்திய அரசு தொடா்ந்து அமைதி காத்து வருகிறது.
மேலும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். நோய் எதிா்ப்புத் திறன் வயதை 25-ஆக குறைத்து, அந்த வயதுக்கு மேலுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி பயனாளிகள் பட்டியலில் சோ்க்கப்பட வேண்டும்.
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துப்பதைத் தொடா்ந்து பயணக் கட்டுப்பாடு, ஊரடங்கு என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இப்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றன. முந்தைய பொது முடக்கத்தால் கடும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்த ஏழை மக்கள், இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் மீண்டும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் மாத வருவாயை உறுதிப்படுத்தும் வகையில், நேரடியாக அவா்களுடைய வங்கிக் கணக்குக்கே மத்திய அரசு மாதம் ரூ. 6,000 நிதியை செலுத்த வேண்டும்.
கரோனா பரவலைத் தடுக்கவும், சிகிச்சைக்கும் தேவைப்படும் கருவிகள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியா வலியுறுத்தினாா்.