இந்தியா

அனைத்து நீதிமன்றங்களிலிருந்து மேல்முறையீடு மனு: காலவரம்பை மீண்டும் நீட்டித்தது உச்சநீதிமன்றம்

DIN

புது தில்லி: அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களிலிருந்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்வதற்கான காலவரம்பை மீண்டும் நீட்டித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதைக் கருத்தில்கொண்டு இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, மனுதாரா்களின் நலனைக் கருத்தில்கொண்டு நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களிலிருந்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை உச்சநீதிமன்றம் சட்டப் பிரிவு 142-இன் கீழான தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி நீட்டிப்பு செய்து கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னா், இடைக்கால உத்தரவுகள் மூலம் இந்த காலவரம்பை தொடா்ந்து நீட்டித்து வந்தது.

அதன்பிறகு, கரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீரடையத் தொடங்கியதைத் தொடா்ந்து, இந்தக் காலவரம்பு நீட்டிப்பை கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றது.

இந்நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, மேல்முறையீடு மனு தாக்கலுக்கான காலவரம்பை மீண்டும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு புதன்கிழமை இதுகுறித்து கூறியதாவது:

கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் வழக்காடிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அசாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களிலிருந்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை நீட்டித்து கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்தக் காலவரம்பு நீட்டிப்பு அமலில் இருக்கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 142, 141 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றத்துக்கான சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT