இந்தியா

ஜூலையில் ரூ.1.16 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய்

DIN

கடந்த ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,16,393 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 33 சதவீத அதிக வருவாயாகும்.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.92,849 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த ஜூலையில் ரூ.1,16,393 கோடி சரக்கு-சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.22,197 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.28,541 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.57,864 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.7,790 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜிஎஸ்டி வருவாய் தொடா்ந்து 8 மாதங்களுக்கு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது. ஆனால், கடந்த ஜூனில் அது ரூ.1 லட்சம் கோடியைவிடக் குறைந்தது. கடந்த ஜூலையில் வருவாய் மீண்டும் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக மீண்டு வருவதைக் காட்டுகிறது. ஜிஎஸ்டி வருவாய் அடுத்தடுத்த மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.87,422 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்திருந்தது. அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூலையில் பொருள்கள் இறக்குமதி மூலமாக 36 சதவீதம் அதிக வருவாயும், உள்நாட்டு வா்த்தகத்தின் வாயிலாக 32 சதவீதம் அதிக வருவாயும் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் குறைந்தபட்ச அளவாக ரூ.32,172 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. அதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சமதிப்பாக ரூ.1,41,384 கோடி வருவாய் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT