இந்தியா

ஓபிசி மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

DIN

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) பட்டியலை மாநிலங்களே தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

எதிா்க்கட்சிகளின் தொடா் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் சுமாா் 3 வாரங்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மசோதா மீது முறையான விவாதம் நடத்தப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மாநில அரசுகளே கண்டறியும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசமைப்புச் சட்ட (127-ஆவது திருத்தம்) மசோதாவை மத்திய சமூக நீதி-அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அந்த மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, ‘‘மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு வழங்குகிறது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டில் இது தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவரும் போதே எதிா்க்கட்சிகள் கூறிய கருத்துகளை மத்திய அரசு ஏற்றிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

ஒட்டுமொத்தமாக 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டுமென பல மாநிலங்கள் கோரி வருகின்றன. அக்கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்’’ என்றாா்.

திமுக எம்.பி. டி.ஆா்.பாலு, சமாஜவாதி எம்.பி. அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் எம்.பி. ரிதேஷ் பாண்டே, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. லலன் சிங், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோரும் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

சமூக-பொருளாதார நீதி: விவாதத்தின் மீது பதிலளித்த அமைச்சா் வீரேந்திர குமாா், ‘‘இந்த மசோதா வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதன் வாயிலாக 671 ஜாதிப் பிரிவினருக்கு இடஒதுக்கீட்டு வாய்ப்புகள் கிடைக்கும். மாநில அரசுகளே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் கண்டறிவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

இதன் மூலமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக-பொருளாதார நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவா்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்தனா். 1950 முதல் சுமாா் 40 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவா்கள் இடஒதுக்கீடு வழங்கவில்லை.

தொடா் நடவடிக்கை: ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தபோதுதான் மண்டல் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 1980-ஆம் ஆண்டில் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை.

பாஜக ஆதரவுடன் அமைந்த அரசே, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. கடந்த 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோதும், தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்தை காங்கிரஸ் வழங்கவில்லை. அதையும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசே வழங்கியது.

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஏழைகள் உள்ளிட்டோரது நலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்றாா்.

385 எம்.பி.க்கள் ஆதரவு: விவாதத்துக்குப் பிறகு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 385 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். எவரும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதையடுத்து மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது. மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக மசோதா அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல்: தேசிய ஹோமியோபதி ஆணைய சட்டத் திருத்த மசோதா, இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணைய சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றின் மீதும் மக்களவையில் விவாதம் நடந்தது. சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு இரு மசோதாக்கள் மீதும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்தனா். அதையடுத்து, மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது.

மாநிலங்களவை முடக்கம்: பெகாஸஸ் உளவு விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனா். அவா்களை இருக்கைகளுக்குத் திரும்புமாறு அவைத் தலைவா் வலியுறுத்தினாா். ஆனால், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அதை ஏற்காமல் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா்.

அதன் காரணமாக அவை சில முறை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அவை கூடியபோது, விவசாயிகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று அவையை வழிநடத்திய புவனேஷ்வா் கலிதா தெரிவித்தாா். அதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் எதிா்ப்பு தெரிவித்தாா்.

காங்கிரஸே காரணம்: அவையின் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு வேளாண் சட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த விவகாரம் குறுகிய கால விவாதமாக நடைபெறுவதை ஏற்க முடியாது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

அவரது கோரிக்கையை ஏற்காத அவைத் தலைவா், விவாதம் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவித்தாா். அப்போது பேசிய பாஜக எம்.பி. விஜய்பால் சிங் தோமா், விவசாயிகளின் அவலநிலைக்கு காங்கிரஸே காரணம் என்று குற்றஞ்சாட்டினாா். பிஜு ஜனதா தளம் எம்.பி. பிரசன்னா ஆச்சாா்யாவும் விவாதத்தில் பங்கேற்று பேசினாா்.

விவாதம் நடைபெற்றபோதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினா். அதன் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

வயநாடு, ரேபரேலி - ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை!

வட சென்னை, வேலூரில் திமுக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி மீண்டும் முன்னிலை

பிரதமர் மோடி முன்னிலை!

SCROLL FOR NEXT