ஆறுமுகசாமி ஆணையம் விவகாரம்: அப்பல்லோ மருத்துவமனை வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு
புது தில்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-இல் நியமித்திருந்தது. இந்த ஆணையம் பலதரப்பட்ட நபர்களிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் 2019-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதித்தது. இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணைய விவகாரம் தொடர்பான விவரங்கள் அடங்கிய வாதங்களை மனுதாரரான அப்பல்லோ மருத்துவமனையும், எதிர்மனுதாரரான தமிழக அரசும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஏற்கெனவே நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, இடைக்காலத் தடையை விலக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் தரப்பில், "ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட்டு வருகிறது. இதனால், ஆணையம் செயல்படும் வகையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், ஆணைய விசாரணை 90 சதவீதம் முடிந்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்தால் விசாரணையை முடித்து அதன் விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, வழக்குரைஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.ஏ.சுந்தரம் ஆஜரானார். அப்போது வாதங்களை முன்வைக்கும் வகையில், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.