44 மாநில கூட்டுறவுக் கடன் சங்கங்களை மூடுவதற்கு நடவடிக்கை: அமித் ஷா
நிதி முறைகேடு புகாா்களில் சிக்கியுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் 44 மாநில கூட்டுறவுக் கடன் சங்கங்களை மூடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று
நிதி முறைகேடு புகாா்களில் சிக்கியுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் 44 மாநில கூட்டுறவுக் கடன் சங்கங்களை மூடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
சில மாநிலங்களில் இயங்கும் மாநில கூட்டுறவு சங்கங்கள், வாடிக்கையாளா்களிடம் இருந்து பெற்ற தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று புகாா்கள் வந்தன. இதையடுத்து, புகாருக்குள்ளான 9 மாநிலங்களில் உள்ள 44 மாநில கூட்டுறவுக் கடன் சங்கங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டின் பலமாநில கூட்டுறவுக் கடன் சங்கச் சட்டத்தின் 86-ஆவது பிரிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒடிஸாவில் 10 சங்கங்கள், மகாராஷ்டிரத்தில் 9, ராஜஸ்தானில் 8, தில்லியில் 7, உத்தர பிரதேசத்தில் 4 மேற்கு வங்கத்தில் 3 சங்கங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குஜராத்தில் உள்ள ஆதா்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம், சண்டீகரில் உள்ள சில்வா் ஃபைனான்ஸ்-கூட்டுறவுக் கடன் சங்கம், ஜாா்க்கண்டில் உள்ள ரெயின்போ மாநில கூட்டுறவுக் கடன் சங்கம் ஆகியவற்றையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்குவது குறித்து நபாா்டு வங்கி, மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது மற்றொரு கேள்விக்கு அமைச்சா் அமித் ஷா பதிலளித்தாா்.