விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் எந்த வகையைச் சேர்ந்தது?
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது.
குன்னூர்: முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், இந்திய விமானப் படையைச் சேர்ந்த எம்ஐ-17வி5 வகையைச் சேர்ந்தது. இது ரஷ்ய ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான கஸன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
இந்த வகை ஹெலிகாப்டர்களில், உள்ளே உயரதிகாரிகள் அமர்ந்து செல்வதற்கான தனிப்பகுதியும், வெளியே, பாதுகாப்புக் கலணையும் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. எம்ஐ-17வி5 வகை ஹெலிகாப்டர்கள், உலகளவில், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தைக் கொண்ட போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்.
இந்த வகை ஹெலிகாப்டர்கள், படை வீரர்கள் மற்றும் ஆயுத போக்குவரத்து, தீயணைப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு வாகனம், தேடுதல் மற்றும் மீட்பு போன்ற பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.