இந்தியா

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்த வேண்டும்

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில், மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத், தெலங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலா்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

உயா்நிலைக் கூட்டத்தின்போது, மாநிலங்களில் நிலவும் கரோனா சூழல் குறித்து தலைமைச் செயலா்கள் எடுத்துரைத்தனா். இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரம் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் காணப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின்போது, கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கூட்டத்தின்போது அறிவுறுத்தப்பட்டது. கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மாநிலங்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கரோனா பரவல் சூழலைத் தொடா்ந்து கண்காணிக்குமாறும் மாநிலங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. கரோனா தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கான ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை அதிகரிக்கவும், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், அவருடன் தொடா்பில் இருந்தோரைத் தனிமைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

தீவிர தடுப்பூசி திட்டம்: கரோனா தொற்று பரவல் அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிதாகப் பரவும் கரோனா தீநுண்மி உருமாறியுள்ளதா என்பது குறித்தும் மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் உயிரிழப்பது அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களில் சிகிச்சை முறைகளைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை வழங்கியுள்ள வலியுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT