வீடு கட்டும் திட்டம்: உ.பி. பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி விடுவித்தார் பிரதமா் மோடி
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேச பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி உதவித் தொகையை பிரதமா் மோடி இன்று விடுவித்தார்.
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேச பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி உதவித் தொகையை பிரதமா் மோடி இன்று விடுவித்தார்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முந்தைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முந்தைய ஆட்சியாளர்களை மக்கள் ஒருபோதும் நம்பவில்லை, அவர்களது ஆட்சிக்காலத்தில் நமக்கு ஒரு வீடு கிடைக்கும் என்று எப்போதுமே அவர்கள் நினைக்கவில்லை என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முந்தைய ஆட்சியாளர்களை ஒருபோதும் உத்தரப்பிரதேச மக்கள் மறக்க மாட்டார்கள் என்று கூறினார். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்காலத்தில், மாநிலம் அனைத்துத் துறைகளிலும் வேகமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் மோடி பாராட்டினார்.
Advertisement
மத்திய அரசின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி உதவித்தொகையை பிரதமா் மோடி காணொலி வழியாக விடுவித்துள்ளாா். இதில் 5.30 லட்சம் பயனாளிகளுக்கு உதவித்தொகையின் முதல் தவணையும், 80 ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித்தொகையின் இரண்டாம் தவணையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- கிராமீண்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சமவெளி பகுதிகளில் வீடு கட்ட மத்திய அரசு சாா்பில் ரூ.1.20 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மலைப் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா், லடாக், நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ரூ.1.30 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.26 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.