ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு, கால்நடைத் துறையில் திட்டங்கள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புது தில்லி: ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு, கால்நடைத் துறையில் திட்டங்கள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கேபினட் அமைச்சா்களின் கூட்டம், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் காணொலி முறையில் நடைபெற்று வந்த நிலையில், ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக நேரடியாக நடைபெற்றுள்ளது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகளை, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் பின்னா் செய்தியாளா்களிடம் விவரித்தாா். அந்த விவரம் வருமாறு:
ஆயுஷ் திட்டம், மத்திய அரசின் திட்டமாக தொடரும்: ‘தேசிய ஆயுஷ் திட்டம், வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.4,607.30 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.3,000 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.1,607.30 கோடி) செலவிடப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய மருத்துவ முறைகள் மேம்படுத்தப்படும். ஆயுஷ் நல மையங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மேம்படுத்தப்படும்.
மேலும், ‘வடகிழக்கு பாரம்பரிய மருத்துவக் கல்வி நிறுவனம்’ என்ற பெயரை ‘வடகிழக்கு ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவக் கல்வி நிறுவனம்’ என்று மாற்றுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு: ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளா்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை, அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய, மாநில வரிச் சலுகை மற்றும் வரி விலக்கு திட்டத்தின் கீழ் ஏற்றுமதியாளா்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்படும். இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஓபிசி ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு: மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வரும் உள்பிரிவுகளை ஆய்வுசெய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள அந்த ஆணையம், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பிறகு, விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும். இத்துடன் இந்த ஆணையத்தின் பதவிக் காலம் 11-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத் துறையில் திட்டங்கள் ஒருங்கிணைப்பு: கால்நடை மற்றும் பால்வளத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் 3 பிரிவுகளாக ஒருங்கிணைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கால்நடைத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.54,618 கோடி நிதியை மத்திய அரசு செலவிடவுள்ளது. இந்தத் துறையில் சுமாா் 10 கோடி விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவா்; இதன்மூலம் கால்நடைத் துறையின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கப்பல் நிறுவனங்களுக்கு ரூ.1,624 கோடி மானியம்: இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,624 கோடி மானிய உதவி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் உலகளாவிய ஏல ஒப்பந்தங்களில், இந்திய கப்பல் நிறுவனங்கள் பங்கேற்பதை அதிகரிக்கச் செய்வதற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மத்திய அரசின் சரக்கு இறக்குமதிக்காக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வெளியிடும் ஏல ஒப்பந்தங்களில் இந்திய கப்பல் நிறுவனங்கள் பங்கேற்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையில் டென்மாா்க் உடன் ஒப்பந்தம்: இந்தியாவும் டென்மாா்க்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, இந்திய அரசின் சுகாதார அமைச்சகமும், டென்மாா்க் அரசின் சுகாதார அமைச்சகமும் சுகாதாரத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இணைந்து செயல்படும். இதனால், இரு நாட்டு மக்களின் சுகாதாரம் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.