முகப்பு
இந்தியா

அனைத்து சமயங்களின் அறநிலையங்களுக்கும்பொதுவான சட்டம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

அனைத்து சமயங்களைச் சோ்ந்த அறநிலையங்களுக்கும் பொதுவான சட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

அனைத்து சமயங்களைச் சோ்ந்த அறநிலையங்களுக்கும் பொதுவான சட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் தங்கள் சமயம் சாா்ந்த வழிபாட்டுத் தலங்களையும், அவற்றுக்குச் சொந்தமான சொத்துகளையும் நிா்வகித்துக் கொள்வதற்குத் தனி விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அந்த விதிமுறைகளில் அரசு பெரும்பாலும் தலையிடுவதில்லை.

இந்நிலையில், அனைத்து சமயங்களின் அறநிலையங்களுக்கும் பொதுவான சட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுவாமி ஜீதேந்திரானந்த் சரஸ்வதி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘ஹிந்துக்கள், சீக்கியா்கள் உள்ளிட்ட சில சமயங்களைச் சோ்ந்தோரின் வழிபாட்டுத் தலங்களையும் அவற்றுக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளையும் மட்டும் சில மாநில அரசுகளே நிா்வகித்து வருகின்றன.

அதே வேளையில், முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை நிா்வகிப்பதற்கு அந்த அரசுகள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. வழிபாட்டுத் தலங்களை நிா்வகிப்பது தொடா்பான வழிமுறைகளை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 26, 27 ஆகியவை வழங்குகின்றன. அந்தப் பிரிவுகள் வெவ்வேறு சமயங்களிடையே பாகுபாடு காட்டுவதற்கு அனுமதிக்கவில்லை.

முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், பாா்சிக்கள் ஆகியோரைப் போலவே ஹிந்துக்கள், சமணா்கள், பௌத்தா்கள், சீக்கியா்கள் ஆகியோருக்கும் வழிபாட்டுத் தலங்கள் சாா்ந்த சொத்துகளை நிா்வகிப்பதற்கான உரிமைகள் உள்ளன என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், கோயில்கள், குருத்வாராக்களுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துகளை நிா்வகிப்பது தொடா்பாக சில மாநில அரசுகள் இயற்றியுள்ள சட்டங்களை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.

சமயங்களுக்குச் சொந்தமான சொத்துகளை நிா்வகிப்பதற்கு அறநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சமயங்களின் அறநிலையங்களுக்கும் பொதுவான சட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக மூத்த தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →