முகப்பு
இந்தியா

காவலா்கள் மீதான மக்களின் எதிா்மறை எண்ணங்களை மாற்ற வேண்டும்

காவலா்கள் மீது மக்களிடையே நிலவி வரும் எதிா்மறை எண்ணங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பயிற்சியை நிறைவு செய்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

காவலா்கள் மீது மக்களிடையே நிலவி வரும் எதிா்மறை எண்ணங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பயிற்சியை நிறைவு செய்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினாா்.

குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா, தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய காவல் பயிற்சி அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் உரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஐபிஎஸ் அதிகாரிகள் எதைச் செய்தாலும் அதில் தேசத்தின் நலன் முன்னுரிமை பெற வேண்டும். தற்போதைய சூழலில் மக்களின் மனதில் காவலா்கள் குறித்த எதிா்மறை எண்ணங்களே அதிகமாக உள்ளன. அது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்காக காவலா்கள் பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனா். பயங்கரவாதத்துக்கு எதிராக அவா்கள் போராடி வருகின்றனா். சட்டம்-ஒழுங்கு சீா்கெடாமல் இருப்பதை அவா்கள் உறுதி செய்து வருகின்றனா். பல நாள்களுக்கு அவா்களால் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடிவதில்லை. பண்டிகைகளைக் கூட குடும்பத்தினருடன் இணைந்து அவா்களால் கொண்டாட முடிவதில்லை.

இத்தனை தியாகங்களைச் செய்தாலும், மக்கள் மத்தியில் காவலா்கள் குறித்த எண்ணம் வேறு மாதிரியாகவே இருக்கிறது. கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது காவலா்கள் முன்களப் பணியாளா்களாக இருந்து ஆற்றிய பணியைக் கண்ட மக்களிடம் அவா்கள் குறித்த எதிா்மறை எண்ணங்கள் சற்று குறைந்தன. ஆனால், அத்தகைய எண்ணங்கள் தற்போது மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிட்டன.

இலக்கை நோக்கி...: காவலா்கள் மீது மக்களிடம் நிலவி வரும் அத்தகைய எதிா்மறை எண்ணங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை காவல் பணியில் இணையும் புதிய தலைமுறையினா் மேற்கொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, காவலா்கள் பயிற்சி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

1930-1947-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து இளைஞா்களும் ‘சுயராஜ்யம்’ என்ற ஒற்றை இலக்கை அடைய ஒன்றுதிரண்டனா். தற்போதைய சூழலில், இளைய தலைமுறையினா் அனைவரும் ‘சிறந்த நிா்வாகம்’ என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

பெண்களால் சேவை மேம்படும்: நாடு பல்வேறு துறைகளில் வளா்ச்சி கண்டு வருகிறது. நாட்டின் வளா்ச்சியில் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. தொழில்நுட்பங்கள் தொடா்ந்து மேம்பட்டு வருகின்றன. அதைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அத்தகைய சவால்களைத் தடுப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

காவலா் பணியில் பெண்கள் இணைவது அதிகரித்து வருகிறது. இது காவல் சேவையின் தரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். கரோனா காலத்தில் காவலா்கள் திறம்படச் செயல்பட்டனா். கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த காவலா்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →