எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்தியா, கிரீஸ் ஆலோசனை
எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியா மற்றும் கிரீஸ் ஆலோசனை நடத்தின.
எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியா மற்றும் கிரீஸ் ஆலோசனை நடத்தின.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள் அரசு முறை பயணமாக கிரீஸ் நாட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் நிகோஸ் டென்டியாசை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (எம்இஏ) தெரிவித்துள்ளதாவது:
பாதுகாப்பு தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா்களும் விரிவாக ஆலோசனை நடத்தினா். குறிப்பாக, எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடா்பாக இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனா். இறுதியில், பயங்கரவாதம் உலகளாவிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதை இரு நாடுகளின் தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.
பயங்கரவாதம் எந்த முறையில் தலைதூக்கினாலும் அதற்கு நியாயம் கற்பிக்க முடியாது என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தனா். மேலும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்த கருத்துப் பரிமாற்றங்களை விரிவான மற்றும் ஆழமான முறையில் இருநாட்டு அமைச்சா்களும் மேற்கொண்டதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.