போதைப்பொருள் இல்லாத இந்தியா: பிரதமா் மோடி வலியுறுத்தல்
போதைப் பொருள் இல்லாத இந்தியா எனும் கனவை நனவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
போதைப் பொருள் இல்லாத இந்தியா எனும் கனவை நனவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நமது சமூகத்தில் இருந்து போதைப்பொருட்களை அடியோடு ஒழிப்பதற்காக கீழ்நிலையில் பணியாற்றும் அனைவரையும் பாராட்டுகிறேன். போதைப் பொருட்கள், இருளையும், கெடுதலையும், பேரழிவையும் ஏற்படுத்துகின்றன.
போதைப் பொருட்கள் பற்றிய உண்மையைப் பகிா்வதில் நமது உறுதித் தன்மையை மீண்டும் வலியுறுத்துவதோடு, போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நமது தொலைநோக்குப் பாா்வையையும் நனவாக்குவோம்.
நினைவில் கொள்ளுங்கள்- போதைக்கு அடிமையாதல் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது கூடாது. அதேபோல், அதை டாம்பிக வாழ்க்கையின் வெளிப்பாடாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
போதைப் பொருள்களின் பிடியில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைக் கூறும் பழைய மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒலிநாடா பதிவையும் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா்.