இந்திய விமானம் பாகிஸ்தானில் அவசர தரையிறக்கம்
ஷாா்ஜாவில் இருந்து லக்னெள நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதால் பாகிஸ்தானின் கராச்சியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டது.
ஷாா்ஜாவில் இருந்து லக்னெள நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதால் பாகிஸ்தானின் கராச்சியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டது.
எனினும், சிகிச்சை பெறும் முன்பே அந்தப் பயணி உயிரிழந்துவிட்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரி கூறுகையில், லக்னெளவுக்கு செல்லும் விமானத்தில் 67 வயது பயணி ஹபீபுா் ரஹமானுக்கு உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தாா்.
Advertisement
ஈரான் வழியாக பாகிஸ்தான் வான்வழியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்திய விமானம் வந்தபோது மனிதாபிமான அடிப்படையில் விமானி அவசர தரையிறக்கம் கோரினாா். விமானத்தில் அந்தப் பயணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த பின்னரும், உடனடியாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க சுமாா் 5 மணியளவில் அனுமதி அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினா் விமானத்தில் சென்று பாா்த்தபோது அந்தப் பயணி உயிரிழந்தது தெரிந்தது.
இதையடுத்து, அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.36 மணிக்கு ஆமதாபாதுக்கு அந்த விமானம் புறப்பட்டது என்றாா்.
இதுகுறித்து இண்டிகோ விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தப் பயணிக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கராச்சி விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா். உயிரிழந்த பயணியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போா் பதற்ற சூழலால் பாகிஸ்தான் வான் வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னா், 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சா்வதேச விமானப் போக்குவரத்துக்கு தனது வான்வழியை பாகிஸ்தான் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.